Thursday 16 January 2014

கடல்நீர் உப்பான கதை


     நாடோடியாக வாழ்ந்த அந்த ஊர் மக்களின் வாழ்வில் நாகரிகம் புகுந்து புரட்சி செய்து கொண்டிருந்தது. பண்டமாற்று முறையில் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது.     

   அப்போதுதான், ஒரு மாற்றம் தன்னை நிகழ்த்திக் கொள்ளத் தயாரானது. தேவை ஏற்படும்போதும் மாற்றம் நிகழும்; சில நேரங்களில் சில விஷயம் தேவையில்லை எனும்போதும் மாற்றம் நிகழும். 'இனி தேவையில்லை' என்றானதால் ஏற்படப் போகும் மாற்றம் இது.


   ஒரு நாள் அந்த ஊரில் பஞ்சாயத்துக் கூடியது. ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் துவக்கி வைத்தார், "கருப்பா, உன் தரப்புலேர்ந்து நீ சொல்ல வேண்டியது சொல்லு"
   "அய்யா, நாலு மூட்டை அரிசியைக் கொடுத்து ஒரு மூட்டை சீனி வேணும்னு கேட்டதுக்கு, வச்சுக்கிட்டே தர முடியாதுன்னு மறுக்குறாருங்கய்யா இந்த சின்னச்சாமி. இது என்னங்க நியாயம்?"
   "ஏல சின்னச்சாமிஊருக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாங்காம எப்டி வியாபாரம் பார்க்க முடியும்? எப்டி பொழப்பு நடத்த முடியும்? ஏன்டா தர மறுக்குற?"
   "அய்யா, என்கிட்ட அரிசி தேவையான அளவு இருக்குங்கவேணும்னா ரெண்டு பருப்பு மூட்டைய கொடுத்துட்டு சீனிய வாங்கிக்கனு சொன்னேன், ஆனா அவர்கிட்ட பருப்பு இல்லங்றாரு"
   "அய்யா, பருப்பு இருந்தா கொடுத்துட்டு மாத்திக்க மாட்டேனாயா? என்கிட்ட இருக்குறததானயா தர முடியும்?" என்றான் கருப்பன்.
 "உன்கிட்ட அரிசிதான் இருக்குங்குறதுக்காக எனக்கு அது தேவையில்லாட்டியும் வாங்கி வச்சுக்க சொல்றியா?" என்று சீறினான் சின்னச்சாமி.
   அந்தச் சமயம், கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் இடையில் புகுந்து சொன்னான், "அய்யா, இந்தப் பிரச்சனை இன்னைக்கு நேத்தி இல்லைங்க, கொஞ்ச காலமாவே இப்டிதாங்க இருக்கு. எல்லாரும் இது மாதிரி இக்கட்டுல மாட்டிக்கிட்டுதான்யா இருக்காங்க. கருப்பன் இன்னைக்குப் பஞ்சாயத்தக் கூட்டி வெளியில சொல்லிட்டான்; மத்தவங்க சொல்லல. அவளோதானுங்க வித்தியாசம்.   இதுக்கு ஒரு முடிவு கட்டனும்யா."
   இதை ஒரு கருப்பனுக்கும், ஒரு சின்னச்சாமிக்குமான பிரச்சனையாக மட்டும் பார்த்து விட முடியாது  என்று ஊர்த்தலைவருக்குப் புரிந்தது. அறிவுப்பூர்வமான விஷயங்களில், ஊர்த்தலைவருக்குப் பக்கபலமாக இருந்தவன்தான் நம்பி. பயங்கரமான மூளைக்காரன். அவனது மூளையில் உள்ள ஒவ்வொரு செல்லும் அந்த மூளைக்காரனுக்கு வேலைக்காரன். எப்பேர்பட்ட பிரச்சனையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து விடுவான்.
   "நம்பி, இந்தப் பிரச்சனைக்கு நல்லா யோசிச்சு நீயே ஒரு ஆலோசனை சொல்லேன்" என்றார் ஊர்த்தலைவர்.  
   வாழும் வாழ்க்கை முறையில் ஓர் அடிப்படை மாற்றத்தையேக் கொண்டு வரப்போகும் ஒரு விஷயம் என்பதால், மூளைக்காரன் நம்பிக்கேக் கூட அதற்கொரு தீர்வு காண்பதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தது. அந்தப் பிரச்சனையின் ஆழம் அப்படிப் பட்டது. காலையில் யோசிக்க ஆரம்பித்தவன் நண்பகல் கடந்த வேளையில் தலைவரிடம் நல்லதொரு யோசனையைச் சொன்னான். ஊர்த்தலைவருக்கும் அது சரியான யோசனையாகப் பட்டது.
   ஊர்த்தலைவர் பேசினார், "இங்க பாருங்கையா, இந்த பிரச்சனையோட வடிவம்தான் வேறயே ஒழிய, ஆணிவேரு  ஒண்ணுதான். நாம இப்ப அரிசி, பருப்புன்னு மாத்திக்கிட்டுருக்கோம், இதுக்கு முன்னாடி ஆடு, மாடுன்னு மாத்திக்கிட்டுருந்தாங்க, அதுக்கும் முன்னாடி வாழ்ந்தவங்க அவங்களுக்கு வசதியா இருந்தத மாத்திக்கிட்டு வியாபாரம் செஞ்சாங்க. ஆனா அடிப்படை பிரச்சனை எந்தக் கட்டதுலயும்  ஒஞ்ச பாடில்ல. பண்டமாற்று முறையிலயும் பல பிரச்சனை இருக்கத்தான் செய்யுது. இதுல திரும்பத்திரும்ப பிரச்சனை வரதுக்குக் காரணமே ஒருத்தன் கொடுக்குறது இன்னொருத்தனுக்குத் தேவைப்படாம இருக்குறதுதான்,  தேவையில்லாதத வாங்கி வச்சு எங்க அத அடுத்தவன்கிட்ட விக்க முடியாம போயிட்டா வீணா போயிடுமேன்னு பயப்படுறதுதான். அதுவும் நியாயமான பயம்தான். இந்தப் பிரச்சனைக்கு ஒரேயடியா முடிவு கட்டனும்னுதான் இன்னைக்குப் பஞ்சாயத்து தீவிரமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துருக்கு. முடிவு என்னன்னா, இனிமே பண்ட மாற்று முறையே கிடையாது, அரிசி பருப்பு விவகாரத்தயே மறந்துடுங்க. எல்லார்கிட்டயும் இருக்குற, நாளானாலும் வீணா போகாத, ஒரு மதிப்புள்ள பொருளைக் கொடுத்துதான் இனிமே தேவையானத வாங்கிக்கணும்."
   "ஒன்னும் வெளங்கலையேயா" என்றது கூட்டத்திலிருந்து ஒரு குரல். அது பைரவனின் குரல். ஊர் மக்கள் சார்பாக எப்போதும் உரக்கப் பேசும் ஒரு குரல்.
   "இனிமே நாம மாத்திக்கப் போறது அரிசி பருப்பு இல்ல; தங்கம்" என்றதும் கூட்டத்தில் ஒரே சலசலப்பு. "அமைதியா இருங்க இன்னும் புரியுற மாதிரி சொல்றேன். நாம எல்லாருமே வீட்ல தங்கத்த சேர்த்து வச்சுருக்கோம். அத ஒரு குறிப்பிட்ட எடைக்கு சின்னதும், பெருசுமா காசா அடிச்சு வச்சுக்க வேண்டியது, காசோட எடைக்கு ஏத்த மாதிரிதான் அதோட மதிப்பு. உதாரணத்துக்கு, ஒரு பெரிய காசுக்கு ஒரு சீனி மூட்டைனா, ஒரு சின்ன காசுக்கு ஒரு அரிசி மூட்டைதேவையில்லாம அதிகப்படியா அரிசியையோ, பருப்பையோ வாங்கி வச்சாதான வீணாப்போயிடும்னு பயப்படுறீங்க, தங்கக்காசு அப்டி வீணாப்போக வாய்ப்பில்லைலஇது எல்லாருக்கும் சம்மதமா?" என்றார் ஊர்த்தலைவர்.
   "இது ரொம்பவே புதுசா இருக்குங்க. இருந்தாலும் ஊர்த்தலைவர் உங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஒத்துக்குறோம்ய்யா" ஊர் சார்பில் பைரவன் பதில் சொன்னான்.
   அதன் பிறகு கருப்பன் தங்கக்காசைக் கொடுத்து சீனி மூட்டையைக்  கேட்டதும் சிறிதும் தயக்கமின்றி தந்துவிட்டான் சின்னச்சாமி.
   இந்த மாற்றம் சரித்திரத்தில் ஒரு மைல் கல்தான். ஊர் மக்களுக்கும்  தங்கக்காசுகளைக் கொடுத்து பொருள்களை வாங்கிக்கொள்வது பழகிப்போக ஆரம்பித்தது.
   காலம் நகர்ந்தது. காலம் நகர்ந்தது என்று சொல்வதா? இல்லை தான் போட்டத் திட்டப்படி, காலம் காயை நகர்த்தியது என்று சொல்வதா? பிரச்சனை ஒரு விதத்தில் முடிந்தது என்றாலும் அது வேறு வடிவத்தில் முளைத்தது. பிரச்சனைகளை மனிதனும் களையெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான்; பிரச்சனைகளும் மறுபடி மறுபடி தலையெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
   "ஊரே கூடி ஒரு பஞ்சாயத்தைக் கூட்டியது. ஊர் சார்பாக பைரவன் ஊர்த்தலைவர் முன் பேசினான், "அய்யா, தங்கக்காசு விஷயத்துல ஏகப்பட்ட திருட்டு நடக்குதுங்க. முன்ன இந்தப் பிரச்சனை இல்லாம இருந்துச்சுங்க. தங்கக்காச களவாடுறது ரொம்பவே சுலபமா இருக்குறதால இது ஒரு புதுப்பிரச்சனையா முளைச்சுருக்குங்க. நீங்க சொன்னீங்கன்னுதான் தங்கக்காசு விஷயத்துக்கு ஒத்துகிட்டோம். ஆனா இது சரிபட்டு வராது போலங்கய்யா. நாம பழையபடி அரிசி பருப்பு மாத்தியே பொழப்பு நடத்தலாம்னு தோனுதுங்க."
   நம்பி குறுக்கிட்டுச் சொன்னான், "இங்க பாரு பைரவா, இருட்டப் பார்க்க பயமா இருந்தா விளக்கப் பொருதிக்கனும்; அத விட்டுட்டு கண்ணையேத் தொறக்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"
   "சரியா சொன்ன நம்பி, பண்டமாற்று முறைய விட தங்கக்காசு விஷயம் எவ்வளவோ பரவால. இந்தத் திருட்டுப் பிரச்சனைக்கு மட்டும் ஒரு தீர்வு கட்டிட்டா போதும்" என்றார் ஊர்த் தலைவர்.
  ஆற அமர ஆலோசனை செய்த பிறகு ஒரு முடிவு கட்டினார்கள். தேவைக்கு மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு தேவைக்கதிகமான தங்கக்காசுகளைப் பாதுகாப்பாக வைக்க ஒரு பாதுகாப்பகம் திறக்க பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பெரிய குடோனைப் பாதுகாக்க சில காவலர்களும், மூளைக்காரன் நம்பியே அதன் நிர்வாகியாகவும் பணியமர்த்தப்பட்டனர்.  


   ஊர் மக்கள் எல்லோரும் தங்களிடம் இருந்த அதிகப்படியான தங்கத்தை ஒப்படைத்துவிட்டு, தங்கத்தின் எடையைக் குறிப்பிட்டு அதற்கான ரசீதைப் பெற்றுக்கொண்டனர். அந்த ரசீதைக் கொண்டுவந்து இன்னொருவர் கொடுத்தாலும் அதற்குரிய தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் ரசீதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது
   கொஞ்ச காலத்திற்குப் பிறகு, ஊருக்குள் ரசீதை வைத்தே வணிகம் நடைபெற ஆரம்பித்தது.

   "ஒரு லிட்டர் எண்ணெய் கொடுண்ண, இந்தா ரசீது"

   "என்னப்பா ரசீத நீட்ற, தங்கக்காசு இல்லையா?"
   "என்னண்ண நீ, இப்பதான் எல்லாரும் ரசீதக் கொடுத்தே பொருள வாங்க ஆரம்பிசுட்டாங்களே. இப்ப, நான் போய் குடோன்ல ரசீதக் கொடுத்து, தங்கக்காச வாங்கிட்டு வந்து உன்கிட்டக் கொடுத்தா நீ என்ன பண்ணுவ, அத குடோன்ல பத்திரமா வச்சுட்டு அதுக்கான ரசீத வாங்கிட்டு வந்து வச்சுப்ப. அதுக்கு நீ என்கிட்டயே ரசீத வாங்கிக்கலாமே, அதான் யார் போய் ரசீதக் கொடுத்தாலும் தங்கக்காச வாங்கிக்கலாம்ல. உனக்கு எப்ப மாத்தணும்னு தோணுதோ அப்ப மாத்திக்க. எதுக்கு ஒட்டிக்கு ரெட்டி வேலை பார்க்கணும்?"
   "அதுவும் சரிதான்."
 நாளாக நாளாக, முன்பு தங்கக்காசுகளைக் கொடுத்துப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்கள், ரசீதுகளைக் கொடுத்தே தேவையானவற்றை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தனர்
   வேண்டுமென்ற சமயம், ஊர் மக்கள் ரசீதுகளைக் கொடுத்து அதற்குரிய தங்கத்தைக் கேட்ட பொழுது, குடோன் தலைமையான நம்பி, ரசீதைப் பெற்றுக்கொண்டு தங்கத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
   காலப்போக்கில் ஊர் மக்களுக்கு அடிக்கடி ரசீதைக் கொடுத்து தங்கத்தைப் பெற்றுக்கொள்வது அலுத்துப்போய் விட்டது. அது வீண் வேலையாகப் பட்டதால், ரசீதுகளையேத் தங்கமாக மதித்து அதையே மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். குடோனுக்கு ஊர்மக்கள் வருவதே குறைந்து போனது. அரிதாகவே அவர்கள் அங்கு சென்றனர்.
   அந்தச் சமயத்தில்தான், கருப்பனிடம் ஒரு நாள் தங்கக்காசுகளும், ரசீதுகளும் சுத்தமாக தீர்ந்து போயின. கருப்பன் வேறு வழியின்றி குடோனுக்குச் சென்றான்.
   "நம்பி, நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். எனக்கு இருபது தங்கக்காசுக்கு ஒரு ரசீது போட்டுக் கொடுத்தீனா ரொம்ப உதவியா இருக்கும்" என்றான் கருப்பன்.
   எதிர்பாராமல் கருப்பன் அப்படிக் கேட்டதும் நம்பிக்கு அது புதிதாக இருந்தது. "என்ன கருப்பா இப்டி கேக்குற? நீ 20 தங்கக்காசு கொடுத்தாதான நான் ரசீது போட்டுக் கொடுக்க முடியும்?" என்றான் நம்பி.
   "இல்ல நம்பி, கடனா கொடுத்தீனா நீ கொடுக்குற ரசீதுக்கு வாரம் ஒரு தங்கக்காசு வீதம் 20 வாரத்துல கடன அடைச்சுடுவேன்" என்றான் கருப்பன்.
   ஒரே ஒரு போலி ரசீதில் என்னவாகிவிடப் போகிறது என்று நினைத்து நம்பியும், இருபது தங்கக்காசுக்கான ரசீதில் கையெழுத்தும், முத்திரையும் போட்டுக்கொடுத்து விட்டான் . கருப்பனும் சொன்னபடியே முதல் வாரம் வந்து ஒரு தங்கக்காசை நம்பியிடம் செலுத்திவிட்டுப் போனான். இருந்தாலும் நம்பியின் நெஞ்சுக்குள் திக்திக்கென்றுதான் இருந்தது. கணக்குப் பார்த்தால் கையைக் கடிக்குமே என்ற பயம். எங்கே விஷயம் வெளியே தெரிந்து மாட்டிக்கொள்வோமோ என்ற பயம்.
   வெளியே புழக்கத்திலிருக்கும் அனைத்து ரசீதுகளையும் கொண்டு வந்து நீட்டினால் அதற்குரிய தங்கத்தை ஊர்மக்களுக்கு நம்பியால் முன்பு கொடுத்துவிட முடியும். ஆனால் இப்போது முடியாது. போலியாக எழுதிக்கொடுத்த ரசீதுக்கு மட்டும் கணக்கு இடிக்கும். ஆனால் ஒன்று, ஊர் முழுவதும் ஒன்றுகூடி வந்து எல்லா ரசீதுகளையும் நீட்டினால்தான் அவனுக்குத் தங்கக்காசு இடிக்குமே தவிர, மற்றபடி பிரச்சனை வராது. அதுமட்டுமல்லாமல், தற்போது ஊர் மக்கள் அரிதாகவே தங்கக்காசுகளைத் திரும்ப வாங்க குடோனுக்கு வந்தனர். அந்த ஒரே தைரியத்தில்தான் நம்பி போலி ரசீதை எழுதிக் கொடுத்தான் என்றாலும் அவனது இதயம் பயத்தில் கிடந்து அடித்துக்கொண்டுதான் இருந்தது. ஒருவழியாக இருபதாவது வாரமும் வந்தது. கருப்பன் கடைசி தங்கக் காசையும் கொடுத்துக் கடனை முடித்தான். அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது நம்பிக்கு. போலி ரசீதுக்கான 20 தங்கக்காசுகளையும் வசூலித்து விட்டான். இப்போது ஊர் முழுக்க வந்து ரசீதை நீட்டினாலும் தன்னால் அனைத்து ரசீதுக்குமான தங்கக்காசுகளைக் கொடுத்துவிட முடியும் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். அந்த  அனல் மூச்சின் சூட்டில்தான் மூளைக்காரனுக்கு மூளையில் பொறி தட்டியது. லாபம் பார்க்கலாமே என்ற ஆசை ஒரு பக்கம் வர, ஊர்த்தலைவரிடம் மாட்டிக்கொண்டால் என்னாகுமோ என்ற பயம் இன்னொரு பக்கம் வர, இரண்டுக்கும் நடுவில் மூளைக்காரனின் மூளை வேலையில் இறங்கியது.
   மறுமுறை கருப்பன் வந்தான்.
   "நம்பி, இந்த தடவையும் 20 தங்கக்காசுக்கு ஒரு ரசீது எழுதிக்கொடுத்தீனா, போன தடவ மாதிரியே வாராவாரம் வந்து கடன கட்டிடுறேன்."
   "இங்க பாரு கருப்பா, இதுல எனக்கு பயங்கரமான ஆபத்து இருக்கு. இருந்தாலும் உனக்காக 20 தங்கக்காசுக்கு ரசீது எழுதித் தாரேன், ஆனா நீ வாரம் ஒரு தங்கக்காசு வீதம் 25 வாரத்துக்குக் கட்டனும். எனக்கு 5 தங்கக்காசாவது லாபம் இருக்கனும். அப்பதான் என்னால இத செய்ய முடியும். உனக்கு சம்மதமா?"
   "சரி நம்பி, அப்படியே செய்றேன்" என்று கருப்பனும் ஒப்புக்கொண்டான். 
   கருப்பன் மட்டும் அடிக்கடி குடோனுக்கு சென்று வருவதைக் கவனித்தான் பைரவன். காரணமில்லாமல் கருப்பன் வந்து போக மாட்டானே என்று சந்தேகப் பட்டான்.
  சில மாதங்களில், கருப்பன் தன் மூலம் முக்கியமான இன்னும் சில பேருக்கு இந்த வழியில் போலி ரசீதை வாங்கிக் கொடுத்து தன்னிடமே வட்டியைக் கொண்டுவந்து கட்டிவிடும்படி செய்தான். கருப்பனை வைத்துத் தன் தொழிலை சிறிது விஸ்தாரப்படுத்தி பத்துப் பதினைந்து பேருக்கு போலி ரசீது எழுதிக்கொடுத்து லாபம் பார்க்க ஆரம்பித்தான் நம்பி.
   பைரவன் கருப்பனை வழியில் மறித்து மேம்போக்காக அவனைக் கிளறிப்பார்த்தான். பைரவனிடம் சொன்னால் விஷயம் கெட்டுவிடும் என்று கருப்பன் எதையும் சொல்லாமல் மழுப்பி மறைத்து விட்டான். பைரவனும் விடுவதாயில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையாக, கருப்பனிடம் போலி ரசீது வாங்கிய ஒருவனைப் பிடித்து விசாரித்ததில் என்ன நடக்கிறது என்பதை ஏதோ அரைகுறையாக புரிந்துகொண்டான் பைரவன். சதி நடக்கிறது என்பதை ஊருக்குள் சொல்லிப் பார்த்தான். யாரும் நம்புவதாயில்லை. எப்போது கொண்டுபோய் ரசீதை நீட்டினாலும் தங்கக்காசுகளை உடனே தருபவனாயிற்றே என்பதால் மக்களுக்கு நம்பி மீது நம்பிக்கை இருந்தது.
   ஊருக்குள் விஷயம் கசிந்து விட்டது என்ற செய்தி நம்பியின் காதை எட்டியது. மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து அவன் குதூகலமடைந்தான்.
   எல்லோரும் ஒரே நேரத்தில் எல்லா ரசீதுகளையும் நீட்டினால் நம்பியை மாட்ட வைத்துவிட முடியும் என்று எடுத்துச் சொல்லி பைரவன் ஊர் மக்களுக்குப் புரிய வைத்தான். பைரவன் எப்போதும் தங்களுக்கு நல்லதைத்தான் நினைப்பான் என்பதாலும், இவ்வளவு தூரம் சொல்கிறானே என்பதாலும் ஊர் மக்கள் படையாகத் திரண்டு குடோனுக்குச் சென்றனர். ஊரே ஒன்று சேர்ந்து எல்லா ரசீதுகளையும் கொடுத்துத் தங்கத்தைக் கேட்க, நம்பிக்கு உள்ளுக்குள் வியர்த்துக் கொட்டியது. ஆனால், அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக நம்பியால் அனைத்து ரசீதுகளுக்கும் தங்கக்காசுகளைக் கொடுக்க முடிந்தது. ஊர் மக்கள் ஏமாந்தது மட்டுமல்லாமல் நம்பியிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு எல்லா தங்கக்காசுகளையும் மீண்டும் குடோனிலேயேப் பாதுகாப்பாக வைக்கும்படி நம்பியிடம் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
   பைரவனுக்கு எதுவும் பிடிபடவில்லை. நம்பி சிறிய அளவில்தான் வியாபாரத்தை வளர்த்திருந்ததால், எல்லா ரசீதுகளையும் ஒரே நேரத்தில் கொடுத்தபோது நம்பியிடம் குறைந்த அளவிலேயே தங்கக்காசுகள் இடித்தன. தான் அதுவரை வட்டியில் லாபம் பார்த்து சேர்த்து வைத்திருந்த தங்கக்காசுகளை வைத்து நம்பி கணக்கை சரிகட்டிவிட்டான் என்பது பைரவன் மூளைக்கு எட்டவில்லை.
   ஊர்த்தலைவரும் விஷயம் கேள்விப்பட்டு பைரவனைத்தான் எச்சரிக்கை செய்தாரே ஒழிய, அவருக்கும் நம்பி மீது சந்தேகம் எழவேயில்லை. இப்போது நம்பி மீது ஊர் மக்களுக்கும் நம்பிக்கை வேரூன்றிவிட்டது. ஊர்மக்களின் அந்த நம்பிக்கையே, நம்பிக்கு மேலும் மேலும் லாபம் பார்ப்பதில் துணிச்சலை வளர்த்துவிட்டது. அதிக அளவில் போலி ரசீதுகளைத் தயார் செய்து புழக்கத்தில் விட ஆரம்பித்தான். 
      பைரவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஊர் மக்கள் அதன் பிறகு அவன் பேச்சை நம்பத் தயாராக இல்லை. ஆனால், நம்பியின் வாழ்வில் செல்வம் கொழிப்பதைப் பார்த்து ஊர்த்தலைவரேக் கூட சில சமயம் நம்பி மீது சந்தேகப்பட்டார்.
   ஒழுங்காக வட்டி கட்டச் சொல்லி கருப்பன் கொடுத்த நெருக்கடியால், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக வட்டி கட்ட முடியாத சில பேர் ஊர் மக்களிடம், பைரவன் சொன்னது போல் குடோனில் பெரிய சதிதான் நடக்கிறது போல என்று சந்தேகத்தை வளர்த்து விட்டனர். ஊர் மக்கள் மனதில் சந்தேகம் வளர வளர, ஒரு கட்டத்தில் எல்லோரும் திரண்டு சென்று ஒரே நேரத்தில் எல்லா ரசீதுகளையும் கொடுத்து மறுபடியும் தங்கத்தைக் கேட்டனர். நம்பியால் இந்த முறை சில ரசீதுகளுக்கு மட்டும் தங்கக் காசுகளைத் திருப்பித் தர முடியவில்லை. வாராக்கடனால் வந்த விபரீதம், நம்பியின் மீது ஊர் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை சுக்கு நூறாக்கியது. பஞ்சாயத்தைக் கூட்ட ஊர்மக்கள் தயாராகினர்.
   பஞ்சாயத்து கூடுவதற்கு முன் நம்பி ஊர்த் தலைவர் வீட்டிற்குச் சென்று நடந்ததை விலாவாரியாகச் சொல்லி ஊர்த்தலைவர் காலில் விழுந்து கதறினான். காலைப் பிடித்தவனுக்குத் தன் தோளைக் கொடுத்தார் ஊர்த் தலைவர்.
   "நம்பி, நீ நல்ல மூளைக்காரன், உன்ன தண்டிக்கிறத விட தட்டிக்கொடுக்கனும்னுதான் எனக்குத் தோனுது. வர லாபத்துல எனக்கும் பங்கு கொடு, உன்ன நான் காப்பாத்துறேன். என்ன சொல்ற?"
      நம்பி இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
   "நீங்க என்ன சொல்றீங்களோ அப்டியே செய்றேங்கையா" என்று நிம்மதியடைந்தான் நம்பி.
   இருவரும் மணிக்கணக்கில் உக்கார்ந்து ஒரு திட்டம் தீட்டினர்.
   மறுநாள் காலை பஞ்சாயத்துக் கூடியது. ஊர்த் தலைவர் பேசினார்.
   "நம்பி செஞ்சது தப்புதான். செஞ்ச தப்புக்குத் தண்டனையா அவன் சம்பாரிச்ச எல்லாத்தையும் ஊருக்கே பிரிச்சுக் கொடுத்துடுவோம். ஆனா, அவன் அப்டி போலியா எழுதிக் கொடுத்த ரசீத வச்சு ஊருக்குள்ளயே சில பேரு நல்ல நிலைமைக்கு வந்துருக்கீங்க. அதையும் மறுக்குறதுக்கில்ல. நம்பி செஞ்சதுல சில நல்ல விஷயமும் இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருங்க. நமக்கு ரசீத கொடுத்துப் பொருள் வாங்குறது நல்லா பழகிப் போச்சு. பழைய பண்டமாற்று முறையில உள்ள மாதிரி இதுல எந்த பிரச்னையும் தலை காட்டல. ரசீத கொடுத்து பொருள் வாங்குறதுதான் எப்போதுமே சரியா இருக்கும். அதுல எந்த மாற்றமும் இல்ல.
   நீங்க இது மாதிரி நம்பிய மாட்ட வைக்கனும்னு நெனச்சாலொழிய, ஊர் முழுக்க எல்லாருக்கும் ஒரே நேரத்துல தங்கம் தேவைப்பட போறதில்ல. அதனால இது மாதிரி ரசீது எழுதி இல்லாதவங்களுக்குக் கொடுத்தா அவங்க பொழப்ப நடத்தவும் அது உதவியா இருக்கும். ஆனா சும்மா கடன குடுத்தா அப்புறம் ஒருத்தனும் வேலைக்கு போக மாட்டான், உற்பத்தியும் குறைஞ்சு போயிடும். அதனால வாங்குற கடனுக்கு வாராவாரம் வட்டியைக் கட்டட்டும்அது மூலமா குடோன்லையும் தங்கம் சேரும். வெள்ளம், வறட்சினு வர காலத்துல அந்த தங்கத்த எடுத்து  ஊருக்குப் பயன்படுத்திப்போம்."
   பைரவன் குறுக்கிட்டான், "எவ்வளோ தங்கம் இருக்கோ அதே அளவுக்கு ரசீது இருந்தாதானையா சரியா இருக்கும். இல்லாத தங்கத்துக்கு நம்ம இஷ்டத்துக்கு எப்டிங்கையா ரசீது எழுதலாம்? அது என்னங்ககையா முறை? எக்கச்சக்கமா ரசீது எழுதிட்டா திடீர்னு ஒரு சமயம் ஊர்ல பாதி பேருக்கு தங்கம் தேவைபட்டா, குடோன்ல அதுக்கான தங்கம் இருக்காதேய்யா" 
  பைரவன் விவகாரமாக கேள்விகேட்க ஊர்த்தலைவர் உதவிக்காக நம்பியைப் பார்த்தார். நம்பியும் சட்டென்று யோசித்து ஊர்த்தலைவர் காதுக்குள் ஒரு தீர்வை ஓதினான். பிறகு ஊர்த்தலைவர் தொடர்ந்தார், "பைரவன் கேக்குறதுலையும் நியாயம் இருக்கு. நம்ம இஷ்டத்துக்கு போலி ரசீது எழுதுனா அது நமக்கே ஒரு நாள் ஆபத்தா முடிஞ்சுடும். அதனால குடோன்ல இருக்குற தங்கத்துல பத்துல ஒரு பங்கு அளவுக்குத்தான் போலி ரசீது போடனும்னு வச்சுப்போம். அந்த அளவ தாண்டாம இருக்கானு பரிசோதனை போட்டு மாசம் ஒரு தடவ நானே சரி பார்த்துக்கிறேன். நம்பி அதுல ஏதும் தப்பு செய்யாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. இந்த ஒரு தடவ நம்பிய மன்னிச்சு விடுவோம். மன்னிச்சு விடுறதுக்கும் ஒரு காரணம் இருக்கு. நம்பி செஞ்சதுக்கு பிராயச்சித்தமா அவனே ஊர் மக்களுக்கு ஒரு நல்ல திட்டத்த  யோசிச்சு சொல்லிருக்கான்.
   அது என்னான்னா, கடன வாங்குறவங்க வாராவாரம் கட்டுற வட்டிக் காசுல ஆறுல ஒரு பாகத்த ஊர் மக்களுக்கே ஒதுக்குவோம். அவங்கவங்க குடோன்ல சேர்த்து வச்சுருக்க தங்கத்தோட அளவுக்கு ஏத்த மாதிரி கணக்குப் போட்டு அத அவங்கவங்க கணக்குல வரவு வச்சுடுவோம். சரியா?" என்றார் ஊர்த்தலைவர்.
   கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது வழக்கமான, குழப்பத்தின் சலசலப்பு அல்ல; ஆசையின் சலசலப்பு. இதுவரை குடோனில் சும்மா இருந்த தங்கத்திற்கு வட்டி கிடைக்கிறதே என்ற ஆசையில் ஊர் ஜனமும் ஆமோதித்தது. ஊர் ஜனமே ஆமோதித்த பின்பு பைரவனுக்கும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பஞ்சாயத்து கலைந்தது.
   நம்பி பஞ்சாயத்துத் தலைவரிடம் சென்றான்.
  "அய்யா, ரொம்ப சாமர்த்தியமாப் பேசி ஊர் மக்கள சமாளிச்சுட்டீங்கய்யா. ஆனா, இருக்குற தங்கத்துல பத்துல ஒரு பங்க தாண்டி போலி ரசீது போடாட்டி நாம லாபம் பார்க்க முடியாதேயா?"
   "அது சும்மா ஊருக்காக சொன்னது நம்பி, நீ எவளோ வேணும்னாலும் போலி ரசீது போடு."
   "அய்யா, நெறையா போலி ரசீது எழுதுனா நேரம் வீணாகும், அதனால ரசீது அடிக்க ஒரு மெஷின் இருந்தா நல்லா இருக்கும்யா. அது மூலமா மிச்சமாவுற நேரத்துல வேற ஏதாவது திட்டம் போடுவேன்யா"
   "மூளைக்காரண்டா நீ. இன்னும் வேற ஏதாவது வேணுமா? கேளு"
   "அய்யா, கடைசியா ஒன்னு, போலி ரசீதுன்னு சொன்னா, போலி-ங்ற  அந்த வார்த்தை மக்கள் மனச உறுத்திக்கிட்டே இருக்கும். அது ஒரு நம்பிக்கையில்லாதனத்த வளர்த்துக்கிட்டே இருக்கும். அதனால இனிமே போலி ரசீதுன்னு சொல்லாம வேற பேர் வச்சு சொல்லலாம்யா"
   "அதுவும் சரிதான். என்ன பேர் வைக்கலாம்?"
   "பணம்-னு வைக்கலாம்யா."
 "பணம். நல்லாருக்கே! நம்பி, இன்னும் உன்னால என்னென்ன யோசிக்க முடியுமோ, உன் மூளைக்கெட்டுன வரைக்கும் யோசி. பிரச்சனைன்னு வந்தா நான் பார்த்துக்குறேன். எல்லா கணக்கையும் நீ போடு, வர லாபத்துல என் பங்கு எவ்வளவுங்ற கணக்க மட்டும் நான் போடுறேன். சரியா?" என்றது ஊர்த்தலைமை.
   "இது போதும்யா. மக்கள மட்டும் நீங்க பார்த்துக்குங்க, மத்தத நான் பார்த்துக்குறேன்" என்றது குடோன் தலைமை.
   தலைமைகளின் பித்தலாட்டம் அறியாத தவளைகளோ ஆழம் தெரியாமல் காலை விட்டன. அடி ஆழத்தில் சென்று விழுந்த பிறகுதான் தெரிந்தது அது கிணறு என்று. தவளைகள் இப்போது கிணற்றுத் தவளைகளாய்!


                                          *****   கதை முடிந்தது   *****